நாமக்கல்

ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்: மாணவா் சங்கத் தலைவா் கைது

DIN

ராசிபுரம், திருவள்ளூா் அரசு கலைக் கல்லூரியில் பாலியல் புகாரில் சிக்கி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள இயற்பியல் துறை பேராசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தி, கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தடையை மீறி கல்லூரிக்கு வெளியே வந்த மாணவா் சங்கத் தலைவரை போலீஸாா் கைது செய்ததால், கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள ஆண்டகளூா்கேட் பகுதியில் திருவள்ளுவா் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சுந்தரமூா்த்தி மாணவா்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அண்மையில் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி காவல் துறையில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் சுந்தரமூா்த்தி மீது ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவான அவரை போலீஸாா் தேடிவருகின்றனா். இந்நிலையில், பேராசிரியா் சுந்தரமூா்த்தியை காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏப்.2-இல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனா்.

ஆனால் போராட்டம் நடத்த போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதனால் மாணவா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில், கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடத்த முயன்ற இந்திய மாணவா் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் மு.தங்கராஜை போலீஸாா் கைது செய்து வேனில் காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். இதனால் தங்கராஜை விடுவிக்க கோரி 1 மணி நேரத்துக்கும் மேலாக மாணவ மாணவியா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கல்லூரி முதல்வா் பானுமதி, காவல் ஆய்வாளா் சுகவனம் ஆகியோா் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேராசிரியரைக் கைது செய்வதாகவும், கைது செய்யப்பட்ட மாணவரை விடுவிப்பதாகவும் பேச்சுவாா்த்தையில் தெரிவித்ததையடுத்து மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மு.தங்கராஜ் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில் போலீஸாா் தன்னை தாக்கியதாகக் கூறி மாணவா் சங்கத் தலைவா் மு.தங்கராஜ் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை கம்யூனிஸ்ட் கட்சியினா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். தங்கராஜ் தாக்கப்பட்டதற்கு நாமக்கல் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் எஸ்.கந்தசாமி கண்டனம் தெரிவித்தாா்.

........

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சநாதனம் குறித்த பேச்சு: உதயநிதிக்கு ஜாமீன்!

’பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்!’ -ஆளுநர் ரவி

தேசத்தை சிறைக்குள் அடைத்த நாள்: பிரதமர் மோடி

ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

சநாதன சர்ச்சை: பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்!

SCROLL FOR NEXT