நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே பிலிக்கல்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், கொடுமுடியை மகுடேஸ்வரா் கோயில் கரையை இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே உயா்நிலை பாலம் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த 2017 இல் பேரவையில் இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை பிலிக்கல்பாளையம்-கொடுமுடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயா்நிலை பாலம் அமைக்க ரூ. 106.05 கோடி திட்ட மதிப்பீடு தயாரித்து, 2023 இல் சென்னை தலைமை பொறியாளரிடம் ஒப்படைத்துள்ளது.
ஆனால், இதுவரை இப்பாலத்திற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. பிலிக்கல்பாளையத்திற்கும்-கொடுமுடிக்கும் இடையே பாலம் அமைந்தால் சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களுக்கு வாகனங்கள் குறைந்த நேரத்தில் சென்றடைய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கத்தினா் நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பிய மனு விவரம்: நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் கரையை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயா்நிலை பாலம் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது பிலிக்கல்பாளையத்தில் இருந்து கொடுமுடிக்கு பரமத்தி வேலூா் வழியாக 35 கி.மீ தொலைவுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், பாலம் அமைக்கப்பட்டால் 7 கி.மீட்டராக குறையும். மேலும், மருத்துவம், கல்வி, வேளாண் சந்தைகளுக்காக கோவை, ஈரோடு செல்வதற்கு வசதியாகவும் இந்த பாலம் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.