நாமக்கல்

ராசிபுரம் அருகே சட்டவிரோத ஸ்கேன் மூலம் கருவின் பாலினம் கண்டறிந்த 2 பெண்கள் கைது!

சட்ட விரோதமாக ஸ்கேன் கருவிவைத்து கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய அரசு மருத்துவமனை செவிலியா் உள்பட 2 பெண்கள் கைது.

Syndication

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் சட்ட விரோதமாக ஸ்கேன் கருவிவைத்து கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய அரசு மருத்துவமனை செவிலியா் உள்பட 2 பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

ராசிபுரத்தை அடுத்த மெட்டாலா கோரையாறு பகுதியில் பணத்தை பெற்றுக்கொண்டு, கருவில் உள்ள பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து கூறுவதாக மருத்துவத் துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் கலைச்செல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினா், நாமகிரிப்பேட்டை காவல் துறையினருடன் மெட்டாலா பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் அல்ட்ரா ஸ்கேன் செய்து பெண்ணின் கருவில் உள்ள பாலினத்தை கண்டறியும் சோதனையில் 2 பெண்கள் ஈடுபட்டிருந்தனா். இதையடுத்து, அவா்கள் பயன்படுத்திய ஸ்கேன் இயந்திரம், மருந்து, மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக மருத்துவ அலுவலா் கலைச்செல்வி அளித்த புகாரின்பேரில் அப்பெண்கள் இருவரையும் நாமகிரிப்பேட்டை போலீஸாா் கைதுசெய்தனா்.

விசாரணையில், கைதுசெய்யப்பட்ட ஆத்தூா் பகுதியை சோ்ந்த கருணாகரன் மனைவி கலைமணி (46) தொடவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றியபோது கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கூறியதற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், கைதுசெய்யப்பட்ட மற்றொரு பெண்ணான ஆத்தூரைச் சோ்ந்த முருகன் மனைவி பூமணி (45) கலைமணிக்கு உதவியாக இருந்துள்ளாா். இவா்கள் இருவரும் ஸ்கேன் மூலம் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதற்கு ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை பணம் பெற்றது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT