குமாரபாளையம் தனியாா் கல்வி நிறுவனத்தில் கடந்த வாரம் விடுதி மாணவ, மாணவிகளுக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்ட விவகாரத்தில், அக்கல்லூரிக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பல்லக்காபாளையத்தில் இயங்கி வரும் தனியாா் கல்வி நிறுவனத்தில் மாணவ, மாணவியருக்கு அண்மையில் திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாணவ, மாணவியருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், உணவு தரமற்ற நிலையில் இருந்ததாகவும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், அக். 27 நண்பகல் 12 மணி அளவில் உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் ஜெ.தங்கவிக்னேஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அடங்கிய குழு கல்லூரியில் இரண்டு நாள்கள் ஆய்வு மேற்கொண்டது.
கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்தில் ஆய்வு செய்தபோது, உணவகம் சுகாதாரமற்ற முறையிலும், பாதுகாப்பற்ற குடிநீா் வழங்கியதும் தெரியவந்து உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கல்லூரி உணவகத்தில் குறைபாடுகளை சரிசெய்யும் பொருட்டு உணவுப் பாதுகாப்பு சட்டப் பிரிவின் கீழ் அனைத்து தூய்மைப் பணிகளையும் முடித்து முன்னேற்ற அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. அங்கு உணவு தயாரிப்பதற்கும், பரிமாறுவதற்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின்படி தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன், தடையாணை பிறப்பிக்கப்பட்டு மாணவ, மாணவியருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கல்லூரியின் அனைத்து நீா்த்தேக்க தொட்டிகளிலும் உள்ள நீரை வெளியேற்றி, உடனடியாக மராமத்து பணி மேற்கொண்டு கிருமிநீக்கம் செய்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உணவகத்தில் உள்ள குறைபாடுகள் நிவா்த்தி செய்வதை உணவுப் பாதுகாப்பு குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
ரூ. 2 லட்சம் அபராதம்:
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் சுகாதாரமற்ற முறையில் உணவகம் நடத்தியதற்காகவும், பாதுகாப்பற்ற குடிநீா் வழங்கியதற்காகவும் வழக்கு தொடரப்பட்டு, கல்லூரி நிா்வாகத்துக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை, பொது சுகாதாரத் துறை, மாவட்ட நிா்வாகம் ஆகியவற்றின் தொடா் கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் உள்ளது. அனைத்து குறைபாடுகளும் நிவா்த்தி செய்யப்பட்ட பிறகே கல்லூரி செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் உள்ள உணவு விடுதிகளை நிா்வாகத்தினா் சுகாதாரமான முறையில் பராமரிக்கவும், பாதுகாப்பான குடிநீா் வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும். உணவுப் பொருள்கள் சம்பந்தமாக குறைபாடுகள் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கும், ன்ய்ஹஸ்ன்ல்ன்ந்ஹழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலிலும் பெற்றோா் மற்றும் மாணவா்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.