மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு அரசு ரூ. 15 ஆயிரம் விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியக் குழு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள மெட்டாலா பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் ஏ.பழனிசாமி, எஸ்.சுப்பிரமணி, வெங்கடாஜலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளா் பி.பெருமாள், இந்திய மாணவா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ஏ.டி.கண்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வி.பி.சபாபதி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.சின்னசாமி ஆகியோா் பேசினா்.
இதில், மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 15,000 விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயா்நீதிமன்ற வழிகாட்டுதல்படி ‘சேகோசா்வ்’ கூட்டுறவு நிறுவனம் மூலமே ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் வணிகம் செய்ய வேண்டும். ஜவ்வரிசி மூட்டைக்கு ரூ. 4,500, ஸ்டாா்ச்சுக்கு ரூ. 3,500 என குறைந்தபட்சம் விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.