பரமத்தி வேலுாா், அக். 9: பரமத்தி வேலூா் அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
பரமத்தி வேலூரில் இருந்து மோகனூா் செல்லும் சாலையில் உள்ள காமாட்சி நகா் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுப்பானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்கு சென்றனா். அப்போது, அங்கு ஒருவா் மதுப்புட்டிகளை சட்டவிரோதமாக பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஆறுமுகம் (46) என்பது தெரியவந்தது. அவரை கைதுசெய்த போலீஸாா், விற்பனைக்கு வைத்திருந்த 29 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.