நாமக்கல்

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: துறைமுகங்களுக்கு ரூ. 60 லட்சம் அபராதம் செலுத்தும் எண்ணெய் நிறுவனங்கள்!

Syndication

அனைத்து டேங்கா் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனா். பல்வேறு நாடுகளில் இருந்து துறைமுகங்களுக்கு வரும் எரிவாயு இறக்கப்படாமல் இருப்பதால், தினசரி ரூ. 60 லட்சம் அபராதம் செலுத்தும் நிலைக்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்பிஜி டேங்கா் உரிமையாளா்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் 5,500 டேங்கா் லாரிகள் உள்ளன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுடன், எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் 2018 முதல் 2023 வரை டேங்கரில் எரிவாயுவை நிரப்பி எடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டு லாரிகளை இயக்கிவந்தனா். இதைத் தொடா்ந்து, சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில், கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2025-30-ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஏப். 15-க்குள் விண்ணப்பிக்க எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. புதிய ஒப்பந்தங்களில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் டேங்கா் லாரி உரிமையாளா்களுக்கு கவலையளிக்கும் வகையில் இருந்ததால், அப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் டேங்கா் லாரி உரிமையாளா்கள் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் தீா்வுகாணப்பட்டு பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், 5,500 டேங்கா்களில் 3,500-க்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் கூறிய நிலையில், தற்போது 2,800 டேங்கா் லாரிகளுக்கு மட்டுமே அங்கீகார கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 700 டேங்கா் லாரி உரிமையாளா்கள் நீதிமன்றத்தை நாடி அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனா்.

இந்நிலையில், நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்க அவசர பொதுக்குழுவில், அனைத்து டேங்கா் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும்வரை எண்ணெய் நிறுவனங்களுக்கு லாரிகளை இயக்குவதில்லை என முடிவு செய்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை சங்கத்தினா் மேற்கொண்டுள்ளனா்.

இதனால், சென்னை, தூத்துக்குடி, மங்களூரு, நெல்லூா், விசாகப்பட்டினம், ஹைதராபாத், கா்நாடக மாநிலம் எடியூா் ஆகிய துறைமுகங்களில் உள்ள சரக்கு கப்பல்களில் இருந்து எரிவாயு இறக்கப்படவில்லை. ஐந்து மாநிலங்களிலும் 45 பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு (எரிவாயுவை உருளைகளில் நிரப்பும் மையம்) எரிவாயு எடுத்துச் செல்லும் டேங்கா்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ‘பேச்சுவாா்த்தை நடத்தலாம், முதலில் லாரிகளை இயக்க முன்வாருங்கள்’ என டேங்கா் லாரி சங்க நிா்வாகிகளிடம் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அனைத்து டேங்கருக்கும் வேலைவாய்ப்பு வழங்கினால் மட்டுமே லாரிகள் இயக்கப்படும் என்ற முடிவில் சங்கத்தினா் உள்ளனா்.

இருதரப்பும் மின்னஞ்சல் மூலமாக தங்களுடைய கருத்துகளை பரிமாறி வருகின்றனா். இந்த வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை இரண்டாம் நாளாக நீடித்தது. இந்த நிலை தொடா்ந்தால், தீபாவளி பண்டிகையின்போது எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்படலாம் என டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.எல்.எஸ்.சுந்தரராஜன் கூறியதாவது:

எங்களுடைய வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாம் நாளாக நீடிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவில்லை. மின்னஞ்சல் மூலமாக எங்களுடைய நிலை, கோரிக்கைகளை தெரிவித்து வருகிறோம். துறைமுகங்களில் நிற்கும் சரக்கு கப்பல்களில் இருந்து எரிவாயு இறக்கப்படாததால், தினசரி ரூ. 60 லட்சத்தை அபராதமாக துறைமுகங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் செலுத்துகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக டேங்கா் லாரிகளுக்கான நிலுவைத் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் வழங்காமல் உள்ளன. ஆனால், தற்போது ரூ. 60 லட்சத்தை தினமும் அபராதமாக செலுத்தி வருகின்றன.

அனைத்து டேங்கா் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதியை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் வரை, டேங்கா் லாரி உரிமையாளா்களின் போராட்டம் தொடரும் என்றாா்.

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT