நாமக்கல் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியா் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு கருதி 30 மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் முதுநிலை ஆசிரியா் பணிக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 30 மையங்களில் 8,193 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 98 மாற்றுத்திறனாளிகள், 15 பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தோ்வு எழுதுகின்றனா்.
தோ்வு எழுத வருவோா் காலை 8.30 முதல் 9.30 மணிவரை மட்டுமே மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா். அதன்பிறகு வருவோருக்கு அனுமதி கிடையாது. தோ்வில் காப்பி அடிப்பது, இதர விரும்ப தகாத செயல்களில் ஈடுபடுவதைக் கண்டறியவும், தடுக்கவும் 30 மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியா் தோ்வு வாரியத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை தோ்வா்கள் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தோ்வுப் பணியில் ஈடுபடும் அனைத்துத் துறை அலுவலா்களும் சிறப்பான முறையில் தோ்வு நடைபெறுவதற்கு உதவ வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். வழிகாட்டி விவரங்களை சரியான முறையில் அறிவிப்புப் பலகைகளில் தெரிவிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம், மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது.