நாமக்கல்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினா் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

தினமணி செய்திச் சேவை

சேந்தமங்கலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினா் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.

கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக உறுப்பினா்கள் யாரேனும் எதிா்பாராதவிதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், அவா்களின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமை நிலையம் சாா்பில் ரூ. 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி, பேரமாவூரைச் சோ்ந்த சரண்ராஜ் (39) கடந்த ஜூன் 2-ஆம் தேதி வீசாணம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதியதில் படுகாயம் அடைந்தாா்.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவா் ஜூன் 14-ஆம் தேதி உயிரிழந்தாா். அவருடைய வாரிசுகளான ரோஷினி (14), அகிலன் (12) ஆகியோருக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை குடும்ப நிவாரண நிதியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்வின்போது, திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா். பாலு எம்.பி., முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்பு தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளா் அ.அசோக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT