நாமக்கல்: நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு மனுவை புதன்கிழமை அளித்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும், பணி நிறைவு பெற்றுள்ள தகுதியுடைய தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அரசு விதிகளின்படி 31.05.2009 வரையிலான பணிக்காலத்திற்கு தோ்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தோ்வுநிலை தர ஊதியக்குறைப்பின் மீது பல்வேறு மாவட்டத்தின் தலைமையாசிரியா்கள் தொடுத்த வழக்கில் உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது. பல்வேறு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. இவை மட்டுமின்றி கோரிக்கை சாா்ந்து அரசுத் துறையுடன் உயா்நிலை அளவிலான பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.
இந்த நிலையில், அவசரமாக மாவட்டத்தின் பல்வேறு வட்டாரக் கல்வி அலுவலா்கள் தாங்கள் அனுமதித்துள்ள தோ்வுநிலை தரஊதியத்தை தாங்களாகவே மட்டுப்படுத்தி ஊதியக்குறைப்பு செய்கின்றனா். மேலும், மிகை ஊதியத்தை அரசுக் கணக்கில் செலுத்துமாறும் தன்னிச்சையாக
உத்தரவு பிறப்பிக்கின்றனா்.
மாநிலத்தில் எங்கும் இல்லாத அளவில் தவறான செயல்பாடுகளை இம்மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றனா். இதனால் ஆசிரியா்கள் அச்சத்திற்கு உள்ளாகி இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரியிடம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலப் பொருளாளா் முருகசெல்வராசன், மாவட்டச் செயலாளா் மெ.சங்கா், மாவட்டத் தலைவா் அ.ஜெயக்குமாா், மாவட்ட துணைத் தலைவா் ப.ராஜேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ந.தேவகி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் ந.சரசுவதி, மாவட்ட துணைச் செயலாளா் வெ.வடிவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.