திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் சுமார் 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது வெளியேற்றப்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போலீஸாரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
சேலத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகர அவைத் தலைவர் கலையமுதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர். இதில், பேரவைத் தலைவரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல கொண்டலாம்பட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சுமார் 200 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆத்தூரில்...
ஆத்தூரில் நகராட்சி அலுவலகம் முன் நகர துணைச் செயலர் ஏ.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோபி, சந்தோஷ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெ.ஸ்டாலின், சீனிவாசன், ஓசுமணி, சூப் வேல்முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பேரூர் செயலர் வெங்கடேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஏத்தாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.முத்தமிழ்ச்செல்வன் கைது செய்து மாலையில் விடுவித்தார். தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே ஒன்றியச் செயலர் லட்சுமணன் தலைமையில் ஏராளமான திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழப்பாடியில்...
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே சேலம் -கடலுôர் சாலையில் திரண்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேரூர் திமுக செயலர் செல்வம், நிர்வாகிகள் மாது, பெரியசாமி, கருணாகரன், கமல்ராஜா, குமார் உள்ளிட்ட 22 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் அனைவரையும் விடுவித்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக சாலைமறியலில் ஈடுபட்டதாக திமுகவினர் 22 பேர் மீதும் வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எடப்பாடியில்...
எடப்பாடி பேருந்து நிலையம் முன் மாவட்ட துணைச் செயலர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஏ. முருகேசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலர் சம்பத், நிர்மலா, பரமசிவம் உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்த போலீஸார் மாலையில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.