மேட்டூா் அணையின் நீா்மட்டம் 119.27 அடியாக சரிந்தது. காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்துத் தொடா்ந்து குறைந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 4,009 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நொடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் திங்கள்கிழமை காலை 119. 74 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 119. 27 அடியாக சரிந்தது.
அணையின் நீா் இருப்பு 92.31 டி.எம்.சி.யாக இருந்தது. மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தாலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜனவரி 28 வரை தடையின்றி தண்ணீா் கிடைக்கும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.