சேலம்

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சேலத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழ் ஆண்டிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு  அலங்காரமும், அபிஷேகமும் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு தங்கக்கவச சாத்துப்படி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு தரிசனம் செய்த பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, தயிர், எலுமிச்சை சாதம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
இதேபோல் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், பிரசன்ன வெங்கடாசலபதி, கடைவீதி வேணுகோபாலசுவாமி, ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயண சுவாமி, பட்டைகோயில் வரதராஜ பெருமாள் , சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள், உடையாப்பட்டி சென்றாயபெருமாள், நாமமலை வெங்கடேச பெருமாள், கூசமலை பெருமாள், நெத்திமேடு கரியபெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சங்ககிரியில்... வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சனிக்கிழமை அதிகாலையிலேயே பல்வேறு திரவியப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டன.  சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசகவப்பெருமாள், மங்கமலை பெருமாள், ஒருக்காமலை வரதராஜபெருமாள் கோயில்களில் அதிகாலையிலேயே பூஜைகள் நடைபெற்றன. காலையிலிருந்தே பக்தர்கள் குடும்பத்துடன் மலைக்கு சென்று பொங்கல் வைத்து சுவாமிகளை வழிபட்டனர்.  சங்ககிரி கிரிகாலனியில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் மூலவருக்கும்  மற்றும் உற்சவ மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
எடப்பாடியில்... புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, எடப்பாடி சுற்றுப்புறப் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக எடப்பாடி - ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற மூக்கரை நரசிம்மபெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீதேவி - பூதேவி உடன் உரை மூக்கரை நரசிம்மபெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. கோயில் பால ஆஞ்சநேயர் சுவாமிக்கு, துளசி , வெற்றிலை அலங்காரம் நடைபெற்றது. எடப்பாடி ஏரி ரோடு சென்றாயப் பெருமாள் கோயில்,  வீரப்பன்பாளையம் திம்மராயப்பெருமாள், ரெட்டிப்பட்டி கிருஷ்ணன் கோயில், மலங்காடு வெற்றுப் பெருமாள் கோயில், கூடக்கல் பாமா, ருக்மணி உடனுறை மாட்டுப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 ஓமலூரில்...  பிரசித்தி பெற்ற சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி மாத முதல் வார சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் காலை முதலே பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கும், பத்மாவதி தாயார், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு 108 பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல்வேறு நறுமணமிக்க பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளும், விலை உயர்ந்த ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டு, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆத்தூரில்... கல்பகனூர்புதூர்  ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் ஆத்தூர் கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெத்தநாயக்கன்பாளையம் கொப்பு கொண்டபெருமாள் மலைக் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி, மலையேறிப் பெருமாளை தரிசித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சநாதனம் குறித்த பேச்சு: உதயநிதிக்கு ஜாமீன்!

’பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்!’ -ஆளுநர் ரவி

தேசத்தை சிறைக்குள் அடைத்த நாள்: பிரதமர் மோடி

ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

சநாதன சர்ச்சை: பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்!

SCROLL FOR NEXT