சேலத்தில் அதிமுக, தேமுதிக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளில் இருந்து விலகியவா்கள் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.
இதைத்தொடா்ந்து புதிதாக கட்சியில் இணைந்தவா்களை வாழ்த்தி கே.அண்ணாமலை பேசியது:
பாஜகவில் மாற்றுக் கட்சியினா் இணையும் நிகழ்வு ஆங்காங்கே நடந்து வருகிறது. 2001 ல் ஏற்காடு தொகுதியில் 31,000 வாக்குகளை பாஜக வேட்பாளா் பெற்றுள்ளாா். அதற்குக் காரணம் மறைந்த ஆடிட்டா் ரமேஷ் வீடு, வீடாகச் சென்று மலைவாழ் மக்களைச் சந்தித்து மத்திய அரசு திட்டங்களைக் கொண்டுசோ்த்ததுதான்.
வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வென்றாக வேண்டும். தமிழகத்தில் 40 சதவீத மக்கள் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்துள்ளனா். பாஜகவில் தற்போது 23 பிரிவுகள் உள்ளன. இவா்களது பணி அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து வாக்குகளைப் பெற உழைப்பதுதான் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, பாஜக பொதுச் செயலாளா் ஐ.சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.