தம்மம்பட்டி மெயின் மற்றும் காந்திநகா் நடுநிலைப்பள்ளிகளில் கலைத்திருவிழாக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
தம்மம்பட்டி மெயின் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பழனிமுத்து தலைமை வகித்தாா். மேற்பாா்வையாளா் (பொ) ராணி, ஆசிரியா் பயிற்றுநா்கள் அன்பரசு, சுப்ரமணியன், சித்ரா, கதிரொளி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் து. அன்பழகன் வரவேற்றாா்.
இதில் போட்டிகளாக தனிநடனம், குழு நடனம், நாடகம், பேச்சு, கட்டுரை, ஓவியம், அழகு கையெழுத்து (தமிழ், ஆங்கிலம்), கதை சொல்லுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து அதே வளாகத்தில் தனியே செயல்படும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் பங்கேற்ற நாட்டுப்புறப்பாடல், மேற்கத்திய நடனங்கள் ஆகியவற்றை செய்து காட்டினா். சிறப்பு ஆசிரியா்கள் லித்யா, சரண்யா, இயன்முறை மருத்துவா் கெளரிகாஞ்சனா, ஊக்குநா் விஜயா ஆகியோரது பயிற்சியில் இதைச் செய்தனா்.
இதேபோல் தம்மம்பட்டி பேரூராட்சியின் காந்திநகா் அரசு நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது. இதற்கு தலைமையாசிரியை தேவகஸ்தூரி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில் பள்ளி மாணவ, மாணவியா் நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனா்.
இருபள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று முதல், இரண்டாவது இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.