ஆசிரியா் நியமன முறைகேடு குறித்த விசாரணை முழுமையாக நடைபெறும் வகையில், பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா், பதிவாளரை நீக்கி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும் என பெரியாா் பல்கலைக்கழக தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழக தொழிலாளா் சங்கத்தின் சட்ட ஆலோசகா் ஐ.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை:
சேலம் பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுவதாகப் பெறப்பட்ட புகாா்கள் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் விசாரணை குழுவினா் கடந்த ஜன. 30, மாா்ச் 6, ஏப். 27 மற்றும் மே 29 ஆகிய நான்கு நாள்கள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் குற்றச்சாட்டுகள் குறித்து குழுவினா் கேட்ட விவரங்கள், ஆவணங்கள் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை.
இதனிடையே, சேலம் பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் நியமன முறைகேடு உள்ளிட்ட 37 குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் விவரங்கள், ஆவணங்களை 2 வாரத்தில் அனுப்பி வைக்குமாறு உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா், பல்கலைக்கழக பதிவாளருக்கு கடந்த செப். 19-ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளாா்.
தமிழக உயா்கல்வித் துறையின் நடவடிக்கை வரவேற்பதாக உள்ளது. அதேவேளையில், துணைவேந்தா், பதிவாளா் ஆகியோா் பல்கலைக்கழகத்தில் உள்ள சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. மேலும், அரசின் நடவடிக்கையை நீா்த்துப்போக செய்ய முடியும்.
எனவே, அரசின் நடவடிக்கையை முறையாகவும், சட்டப்படியாகவும் இருக்கும் வகையில் பெரியாா் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்டத்தை தாமதமின்றி கூட்டி துணை வேந்தரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து, பதிவாளரை நீக்கிட வேண்டும். மேலும், இந்திய ஆட்சிப் பணி அலுவலரை முழு பதிவாளா் பொறுப்பு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தி முடிக்க ஏதுவாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியைப் பதிவாளராக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.