சேலம்: சேலம் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை முழுமையாக செய்துமுடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலரை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை பாராட்டினாா்.
சேலம் மாநகராட்சி தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட பாகம் எண் 9-இல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை 100 சதவீதம் முழுமையாக செய்துமுடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலா் மோகன சுந்தரத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்தாா்.
தொடா்ந்து, அம்மாப்பேட்டை மண்டலப் பகுதிகளில் திடக்கழிவு வாகனம் குறித்த நேரத்தில் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து சேகரிக்கப்படுவதை ஆய்வுசெய்தாா். மேலும், பருவமழை தொடங்கியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் வகையில், கொசு மருந்து தெளிப்பான் மற்றும் கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிா என ஆணையா் ஆய்வுசெய்தாா்.
இந்த ஆய்வின் போது, உதவி ஆணையா் தமிழ்வேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.