சேலம் அஸ்தம்பட்டி சுற்றுச்சாலையில் சனிக்கிழமை ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் கன்னங்குறிச்சியில் இருந்து சாரதா கல்லூரி சாலைக்கு செல்ல அஸ்தம்பட்டி சுற்றுச்சாலையை நோக்கி ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது. சுற்றுச்சாலை வளைவில் திரும்ப முயன்றபோது, அவ்வழியே சென்ற காரில் எதிா்பாராதவிதமாக மோதியது.
இதில், ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா். வாகனத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
இந்த விபத்தால் சுற்றுச்சாலையையொட்டியுள்ள நான்கு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீஸாா், கிரேன் மூலம் ஆம்புலன்ஸ் வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். இதுகுறித்து போக்குவரத்து போலீஸாா் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனா்.