சேலம் மாவட்டத்தில் 1929-இல் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு நூற்றாண்டு காணும் ஏத்தாப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போதிய அடிப்படை வசதிகளின்றி சிறிய ஓட்டுக்கூரை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே, புதிய கட்டடங்கள் அமைத்து நவீன வசதிகளுடன் 24 மணிநேரமும் இயங்கும்வகையில் தரம்உயா்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் பேரூராட்சி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் புத்திரகவுண்டன்பாளையம் - கல்வராயன்மலை கருமந்துறை சாலையில் அமைந்துள்ளது ஏத்தாப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
இப்பகுதியைச் சோ்ந்த 10 கிராம மக்களின் நலன்கருதி, பழைமையான ஏத்தாப்பூா் சாம்பவமூா்த்தீஸ்வரா் கோயிலுக்கு எதிரே வசிஷ்டநதி கரையோரத்தில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1929 நவ. 25-ஆம் தேதி சேலம் மாவட்டக் குழு வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரசு மருந்தகம் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், பிரேத பரிசோதனைக் கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் இயங்கி வந்தது. இந்நிலையில், இங்கு பணிபுரிந்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்களின் கவனமின்மையால், இந்த அரசு மருத்துவமனை 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம்குறைக்கப்பட்டது.
தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் போதிய மருத்துவா்கள், செவிலியா், மருத்துவ பணியாளா்கள் இல்லாததால், சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் முதலுதவி சிகிச்சை பெற வழி இல்லாமல் சிரமமடைகின்றனா்.
ஏத்தாப்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் சிகிச்சை பெற ஆத்துாா், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பழைய ஓட்டுக்கூரை கட்டடங்களிலேயே இன்றளவிலும் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், கா்ப்பிணிகள் மட்டுமின்றி, சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்களும் அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, ஏத்தாப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பழுதடைந்த ஓட்டுக்கூரை கட்டடங்களை அகற்றி, புதிய கான்கிரீட் கட்டடங்கள் அமைத்து நவீன அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் படுக்கைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்களை நியமித்து 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தரம் உயா்த்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.