ஆத்தூரிலிருந்து தம்மம்பட்டிக்கு காலை நேரத்தில் இயக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டதால் தம்மம்பட்டி பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆத்தூா் அரசு போக்குவரத்து பணிமனையைச் சோ்ந்த நீண்ட தூர பேருந்து, ஆத்தூரில் அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மல்லியகரை வழியாக தம்மம்பட்டிக்கு காலை 5. 15 மணிக்கு வந்து சேரும். பின்னா், தம்மம்பட்டியிலிருந்து 5.30 மணிக்கு புறப்பட்டு நாகியம்பட்டி, உலிபுரம், மெட்டாலா, ராசிபுரம், திருச்செங்கோடு, ஈரோடு வழியாக கோவைக்கு காலை 9.30 மணிக்கு சென்றடையும்.
இந்த பேருந்து கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டுவிட்டதால், தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் காலை நேரத்தில் பொதுமக்கள் கோவைக்கு செல்வது சிரமமாக இருந்து வருகிறது.
அதேபோல நகரப் பேருந்து ( வழித்தடம் எண்: 17) ஆத்தூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு சீலியம்பட்டி, மலையம்பட்டி வழியாக தம்மம்பட்டிக்கு காலை 6 மணிக்கு வந்தடையும். இப்பேருந்து கடந்த ஓராண்டாக க நிறுத்தப்பட்டுள்ளது. நகரப் பேருந்து (வழித்தடம் எண் :11) இரவு 10 மணிக்கு ஆத்தூருக்குச் செல்லும் கடைசி பேருந்தாக புறப்பட்டு, ஆத்தூரில் இரவு தங்கிவிடும்.
இந்த பேருந்து அங்கிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மல்லியகரை வழியாக தம்மம்பட்டியை காலை 7 மணிக்கு வந்தடையும். ஆத்தூா் பணிமனையைச் சோ்ந்த ஒரு விரைந்து பேருந்து, தம்மம்பட்டி பணிமனையைச் சோ்ந்த இரண்டு நகரப் பேருந்துகளும் கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டு விட்டதால், சென்னை உள்ளிட்ட வெளியூா்களிலிருந்து தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, உலிபுரம், கொண்டயம்பள்ளி,ஜங்கமசமுத்திரம், கீரிப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, நிறுத்தப்ப்டடுள்ள 3 அரசுப் பேருந்துகளையும் ஆத்தூரிலிருந்து தம்மம்பட்டிக்கு பா்மிட்டில் உள்ளபடி தினசரி இயக்க வேண்டும் என்று தம்மம்பட்டி பகுதி மக்கள், மாவட்ட நிா்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனா்.