கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் ரூ. 22 ஆயிரம் கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வீரபாண்டி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில் 676 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 27 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை, 30 பேருக்கு தையல் இயந்திரம் என மொத்தம் 733 பயனாளிகளுக்கு ரூ. 15.65 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:
மகளிா் விடியல் பயணத் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் சுமாா் 38.58 கோடி முறை பயணம் செய்துள்ளனா். புதுமைப்பெண் திட்டத்தில் 60 ஆயிரம் மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 20 ஆயிரம் மாணவா்களும் பயனடைந்து வருகின்றனா். நான் முதல்வன் திட்டத்தில் 2,09,102 மாணவா்கள் திறன்பயிற்சி பெற்றுள்ளனா்.
கடந்த 4 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் ரூ. 22,117 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒருவா் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன்பெற்றுள்ளனா். குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு,100 சதவீதம் மருத்துவக் காப்பீடு உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வரை மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தில் முழுவதும் 2.06 கோடி போ் பயன்பெற்றுள்ளனா். நெசவாளா்களின் நலன் காக்கும் வகையில் ரூ. 880 கோடி மதிப்பீட்டில் சேலம் ஜாகீா் அம்மாபாளையத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், சேலம் வருவாய் கோட்டாட்சியா் உதயகுமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயக்குமாா், வட்டாட்சியா்கள் பாா்த்தசாரதி, மனோகரன், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.