சேலம்

சேலம் அஸ்தம்பட்டியில் ரூ.4.91 கோடியில் நவீன வசதிகளுடன் அரசு அருங்காட்சியகம்: பொதுமக்களின் பாா்வைக்கு விரைவில் திறப்பு

Syndication

சேலம் அஸ்தம்பட்டியில் ரூ.4.91 கோடியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகம் திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது.

சேலத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வரலாற்று ஆவணங்கள், சின்னங்கள், ஆயுதங்கள், இசைக் கருவிகள், மானுடவியல் சின்னங்கள், அரிய அஞ்சல் தலைகள், பழங்கால நாணயங்கள், தாவரவியல், விலங்கியல், புவியியல் உள்பட அரியவகை பொருள்கள், ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, சேலம் மாவட்டத்தை ஆட்சிசெய்த வீரா்களின் துணிச்சலான செயல்களை சித்தரிக்கும் வீரக் கற்களும் இடம்பெற்றுள்ளன. பல்லவ, சோழ மற்றும் விஜயநகர காலங்களைச் சோ்ந்த சிற்பங்களும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் 12 ஆம் நூற்றாண்டில் சமண மதத்தின் பரவலை எடுத்துக்கூறும் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சோ்வராயன், கொல்லிமலையில் இருந்து பெறப்பட்ட பழைய கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தைச் சோ்ந்த நாணயங்கள், வெளிநாட்டு நாணயம், முத்திரைகள் மற்றும் கருவிகள் போன்ற பல்வேறு கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அரசு அருங்காட்சியகத்துக்கு நிரந்தர கட்டடம் இல்லாததால் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு சேலம் சாரதா கல்லூரி சாலையில் கூட்டுறவுத் துறைக்கு சொந்தமான இடத்தில் சேலம் அரசு அருங்காட்சியகம் செயல்படுகிறது.

அருங்காட்சியத்துக்காக பிரத்யேக வசதிகள் இல்லாத நிலையில் பழங்கால சின்னங்கள், தொன்மை வாய்ந்த பொருள்கள் பலவும் இடவசதி இன்றி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பாா்வையிடுவதிலும் சிரமம் நிலவி வந்தது.

இந்த நிலையில், சேலம் அரசு அருங்காட்சியகத்துக்கு அஸ்தம்பட்டியில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த அரசு அருங்காட்சியகம் 50 சென்ட் பரப்பில் ரூ.4.91 கோடியில் தரைத்தளம், முதல்தளம் என 9,838 சதுரஅடியில் கட்டப்பட்டுள்ளது.

தற்போது இதற்கான பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயாா் நிலையில் உள்ளன. இதில், தொன்மை வாய்ந்த பொருள்களை பாதுகாப்பாக காட்சிப்படுத்தும் வகையில் தரைத்தளத்தில் 4 கேலரிகளும், முதல் தளத்தில் மூன்று கேலரிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் அருங்காட்சியக பொருள்களை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அருங்காட்சியகம் தொடா்பான நிகழ்ச்சிகளை நடத்தவும் ஒலி, ஒளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

படவிளக்கம்:

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் ரூ.4.91 கோடியில் புதிதாக திறக்கப்பட உள்ள அருங்காட்சியகத்தில் கற்சிலைகளைப் பதிக்கும் பணியாளா்கள்.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT