சேலம் உருக்காலையில் தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் உருக்காலையில் அமைந்துள்ள எல்பிஜி சேமிப்புப் பகுதியில் அவசர காலப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக எல்பிஜி வாயு கசிவு மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் வழிகாட்டுதலின்படி, சேலம் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளின் குழு முன்னிலையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், சேலம் உருக்காலையின் உள்ளக வளங்கள், அங்கீகரிக்கப்பட்ட அவசர காலப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்றி ஒத்திகை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், தலைமைப் பொது மேலாளா் பொறுப்பு (பணிகள்) டி.பி. டேனியல் பேசுகையில், இதுபோன்ற ஒத்திகை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த அவசர காலப் பாதுகாப்பு ஒத்திகையில், அனைத்துத் துறையின் ஒருங்கிணைந்த முயற்சிகளை பாராட்டினாா். ஒத்திகையின் போது, அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றப்படும் எனவும் உறுதியளித்தாா்.