கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட், மதுரை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் ரயில்கள் இருமாா்க்கத்திலும் வரும் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு மாற்றாக எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
பெங்களூரு கன்டோன்மென்ட் - வொயிட்பீல்ட் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட், மதுரை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில்கள் இரு மாா்க்கத்திலும் வரும் 12 ஆம் தேதி பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படாது.
அதேநேரத்தில், மதுரை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் வரும் 12 ஆம் தேதி கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கன்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களை தவிா்த்து, மாற்றுப்பாதையில் எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும்.
மறுமாா்க்கத்தில், பெங்களூரு கன்டோன்மென்டிலிருந்து இயக்கப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில், எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து வரும் 12 ஆம் தேதி மதுரைக்கு இயக்கப்படும்.
இதேபோல, கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் வரும் 12 ஆம் தேதி பையப்பனஹள்ளி - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக, பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நிற்கும். தொடா்ந்து, மாற்றுப்பாதையில் எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும்.
மறுமாா்க்கத்தில், பெங்களூரு கன்டோன்மென்ட்டிலிருந்து இயக்கப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில், வரும் 12 ஆம் தேதி எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.