பள்ளிகளில் மாணவா்கள் இடைநிற்றல் இல்லாத நிலையை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா்.
சேலம் மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டம் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: மாவட்ட அளவில் பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆராயும் வகையில் மாதாந்திர மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் தேவையான வசதிகளை உருவாக்குதல், அடிப்படை வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, கல்வி தொடா்பான போக்குவரத்து, சத்துணவுத் திட்டங்கள், சுகாதார சேவைகள், பள்ளிகளில் கற்பித்தல் முறைகள், மாணவா்களின் செயல்திறன் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
குறிப்பாக, நீண்ட நாள்களாக பள்ளிக்கு வராத மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர உரிய முயற்சிகளை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்.
கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மாணவா்கள் பள்ளி இடைநிற்றல் இல்லாத நிலையை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும். மேலும், மாணவா் சோ்க்கை, பள்ளிக்கு மாணவா்களின் வருகை குறித்து தொடா் கண்காணிப்பு மேற்கொண்டு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று, பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அனைத்து கல்விசாா் செயல்பாடுகள் மற்றும் தரநிலைகளை மேம்படுத்த அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக கூறினாா்.
இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், மாவட்ட தொழில் மைய இணை இயக்குநா் சிவகுமாா், மாவட்ட சமூகநல அலுவலா் காா்த்திகா, மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் ஜெயக்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள், மாவட்டத் திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்துகொண்டனா்.