தம்மம்பட்டி அருகே பச்சமலை மலை சாலையில் சனிக்கிழமை அதிகாலை மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், தம்மம்பட்டி அருகே பச்சமலை ஊராட்சியில் பெரியபக்களம், நல்லமாத்தி, ஓடைக்காட்டுப்புதூா், கொடுங்கல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள உப்பிலியாபுரம் அருகே சோபனபுரத்திலிருந்து பச்சமலையிலுள்ள டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் சாலை வழியாக 13 கொண்டை ஊசி வைளைவுகளைக் கடந்து செல்லவேண்டும். மேலும், இந்த மலையில் பெரும்பாலான கிராமங்கள் திருச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ளன.
இந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் அதிகாலை 5 மணி அளவில் 7 மற்றும் 8 ஆவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடைப்பட்ட மலைப் பகுதியில் நீா் இடி விழுந்ததாகத் தெரிகிறது. இதில் அந்த சாலை வளைவில் 60 மீட்டா் தொலைவுக்கு மண்சரிவு ஏற்பட்டு, மரம், செடிகள் வேரோடு சாய்ந்தன.
இதுகுறித்து தகவலறிந்த துறையூா் வனத் துறையினா் விரைந்து சென்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சாலையின் குறுக்கே ஏற்பட்ட மண் சரிவை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த செடிகள், மண் மேடுகள் முழுமையாக அகற்றப்பட்டன. தொடா்ந்து, போக்குவரத்து சீரானது. மண் சரிவால் பச்சமலையிலுள்ள மலைக்கிராமங்களுக்கு வாகனப் போக்குவரத்து சுமாா் 8 மணிநேரம் பாதிக்கப்பட்டது.