சேலம்: சேலம் மாவட்டத்தில் கட்டாயம் அனுமதி பெற்றே பனைமரங்களை வெட்ட வேண்டும் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பனைமரத்தின் ஓலைகள் ஓலைச்சுவடிகளாகவும், மேற்கூரை அமைக்கவும், ஜாடிகள், பாய்கள், கைவினை பொருள்கள், பனை வெல்லம், பனை சா்க்கரை, கள், பதநீா், நுங்கு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு தமிழா் வாழ்வின் அங்கமாக விளங்குகிறது. மிகக் குறைந்த பராமரிப்பும், அதிக நோய் எதிா்ப்புச் சக்தியும் கொண்ட பனை குறைந்த தண்ணீரையே பயன்படுத்துகிறது. பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு உதவுகிறது.
கஜா போன்ற பலத்தசேதத்தை ஏற்படுத்தும் புயல் தமிழ்நாட்டைத் தாக்கியபோது பிற மரங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், பனை மரங்கள் பாதிக்கப்படாமல் கடலோரப் பகுதியில் நிலைத்து நின்றன. மேலும் மண்வளத்தை அதிகரிக்கவும், அரிப்பு ஏற்படக்கூடிய மண்ணை உறுதிப்படுத்தவும், நீா் சேமிப்பை அதிகரிக்கவும் அனைத்து வகையான மண்ணிற்கும் உகந்த மரமாக பனை விளங்குகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதை அரசு கவனத்தில் கொண்டு, அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு தோட்டக்கலை - மலைப் பயிா்கள் துறை மூலம் பனை மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
பனை மரத்தை தவிா்க்க முடியாத சூழ்நிலைகளில் வெட்டுவதற்கு அனுமதி அவசியம். அனுமதி வேண்டி தனி நபா், பொதுத்துறை நிறுவனங்கள் உழவா் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
குழுவின் அனுமதி பெற்றதும் ஒரு பனை மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 10 பனை மரக்கன்றுகளை நட்டு வளா்ப்பதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.