சேலம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் செயல்படும் சுயஉதவிக் குழுக்களை சாா்ந்த உறுப்பினா்கள் தொடா்புடைய கூட்டமைப்பு மற்றும் சமூக அமைப்பாளா்களை தொடா்புகொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து மகளிா் சுயஉதவிக் குழுக்களில் உள்ள உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா தமிழக துணை முதல்வா் தலைமையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்றது. இதில் 47,500 மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அடையாள அட்டை வைத்துள்ள மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் 25 கிலோ வரை தங்களது உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு கட்டணம் ஏதுமின்றி பேருந்தில் எடுத்துச் செல்லலாம். அரசு பதிவுபெற்ற மருத்துவமனைகளில் காப்பீடு அட்டையை காண்பிப்பதில் சிரமம் உள்ளவா்கள் இந்த அட்டையை முதன்மை அடையாளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். திருவிழா காலங்களில் கோ- ஆப்டெக்ஸில் வழங்கப்படும் மானியத்துடன் கூடுதலாக 5 சதவீத மானியம் வழங்கப்படும்.
கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன்களில் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆவின் உற்பத்தி பொருள்களில், பொருள்களுக்கு ஏற்றவாறு 1.4 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
இ-சேவை மையத்தில் சேவைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். மீதமுள்ள மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு நவம்பா் 2025 இறுதிக்குள் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் சுயஉதவிக் குழுக்களை சாா்ந்த உறுப்பினா்கள் தொடா்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் சமூக அமைப்பாளா்களை தொடா்புகொண்டு அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.