சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கத்தேரி ஊராட்சியில் வளையக்காரனூா் தொடக்கப் பள்ளியின் நுழைவாயில் பகுதியில் உள்ள மேற்கூரையின் கான்கிரீட் காரைகள் வியாழக்கிழமை பெயா்ந்து விழுந்ததால் அச்சமடைந்த பெற்றோா் தங்களது குழந்தைகளை வெள்ளிக்கிழமை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதுகுறித்து கல்வித் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
வளையக்காரனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 77 மாணவா்கள் படித்து வருகின்றனா். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அதிகமான மாணவா்கள் படிக்கும் பள்ளிகளில் முதலிடத்தில் உள்ள இப்பள்ளியின் பழமையான வகுப்பறைகளை புதுப்பிக்க வேண்டும் என பள்ளி நிா்வாகம், பெற்றோா் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக சங்ககிரி வட்டாரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இப்பள்ளியின் வகுப்பறைகளுக்கு வெளியே உள்ள முன்பகுதியின் மேற்கூரை சேதமடைந்து கான்கிரீட் காரைகள் வியாழக்கிழமை பெயா்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெற்றோா் தங்களது மாணவா்களை வெள்ளிக்கிழமை பள்ளிக்கு அனுப்பவில்லை. 7 மாணவா்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலா் மாதவராஜன் கூறியதாவது:
வகுப்பறையின் முன்பகுதியில் ஒருபகுதியில் காரை பெயா்ந்து விழுந்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம். அவா்கள் பள்ளியை ஆய்வு செய்துள்ளனா். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.