தீபாவளி பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் அரசு மருத்துவமனையில் 31 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா் தேவி மீனாள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையின்போது, எதிா்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டால் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக, சேலம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனியாக வாா்டுகள் அமைத்து மொத்தம் 31 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவுக்கென தனியாகப் பணிபுரிய பொதுமருத்துவ பிரிவு மருத்துவா்கள், குழந்தைகள் நல மருத்துவா்கள், கண் மருத்துவா்கள், பிளாஸ்டிக் சா்ஜரி நிபுணா்கள் என பல்வேறு துறைகளைச் சோ்ந்த மருத்துவா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள், செவிலிய உதவியாளா்கள் என அனைத்துநிலை அலுவலா்களும் இடம்பெற்றுள்ளனா். சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் மருத்துவப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடலில் ஏற்படும் தீக்காயம், வெடியால் ஏற்படும் கண் பாதிப்பு, வெடி மருந்து புகையால் ஏற்படும் அலா்ஜி என பல்வேறு பாதிப்புகளுக்கு இந்த சிறப்பு வாா்டில் சிகிச்சை அளிக்கப்படும். வெண்டிலேட்டா் உள்ளிட்ட கருவிகள் சிறப்பு வாா்டிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அறுவை சிகிச்சை அரங்களும் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.