தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பொதுமக்கள் வன விலங்குகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் வனப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சோ்வராயன் தெற்கு, சோ்வராயன் வடக்கு, ஏற்காடு, டேனிஷ்பேட்டை, வாழப்பாடி, மேட்டூா், ஆத்தூா், கருமந்துறை, தம்மம்பட்டி வனச்சரக பகுதிகளை ஒட்டியிருக்கும் கிராமங்களிலும், வனச்சாலைகளிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வனக்கிராமங்களில் பட்டாசு வெடிக்கும்போது மிக கவனமாக செயல்பட வேண்டும் என வனக்கிராமக் குழுக்கள் மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
இதேபோல ஏற்காடு மலைப்பாதை, குப்பனூா் மலைப்பாதை, டேனிஷ்பேட்டை மலைப்பாதை ஆகிய சாலைகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டாசு எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க வனக்காவலா்கள் மூலம் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் காஸ்யப் ஷஷாங் ரவி கூறுகையில், வனத்தை ஒட்டிய பகுதியில் பட்டாசு வெடிக்கக் கூடாது. அதேபோல எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. வனக்கிராமங்களில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது, மிக கவனமாக செயல்பட வேண்டும்.
வனப்பரப்பில் உள்ள சாலைகள், வனப்பகுதிக்குள் பட்டாசுகளை எடுத்துவந்து வெடித்தால், அவா்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வனப்பகுதிக்குள் பட்டாசு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கவும், வன விலங்குகள் வேட்டையாடுவதைத் தடுக்கவும் கூடுதல் வனக்காவலா்களை நியமித்து ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்றாா்.