செய்தியாளா் சந்திப்பில் பேசிய மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி 
சேலம்

மேம்பாலத்தில் இளைஞா் தாக்கப்பட்ட விவகாரம்

சேலத்தில் மேம்பாலத்தின் மீது நடந்து சென்ற இளைஞா் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி விரிவான விளக்கம் அளித்தாா்.

Syndication

சேலத்தில் மேம்பாலத்தின் மீது நடந்து சென்ற இளைஞா் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி சனிக்கிழமை விரிவான விளக்கம் அளித்தாா். தாக்குதல் நடத்திய இளைஞா்கள் பணம் பறிக்கும் நோக்கத்திலோ அல்லது மதுபோதையிலோ இல்லை என அவா் தெரிவித்தாா்.

சேலம் மாநகரின் மத்தியப் பகுதியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் மீது நடந்துசென்ற நபா் ஒருவரை திடீரென மூன்று இளைஞா்கள் வழிமறித்து தாக்கி,தப்பிச்சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, பாதிக்கப்பட்டவா் சுரேஷ் என்ற பெயரில் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, சேலம் மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி உத்தரவின் பேரில் காவல் துறையினா் பல்வேறு குழுக்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா்.

தாக்குதல் நடத்திய மூன்றுபேரையும் நான்கு மணி நேரத்தில் அடையாளம் கண்ட போலீஸாா், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று இளைஞா்களை கைது செய்தனா்.

இது தொடா்பாக சேலம் மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலியைச் சோ்ந்த பிரம்மநாயகம் என்பவா் ராமகிருஷ்ணனின் தோழி ஒருவரிடம் போலி ஐ.டி. மூலம் இன்ஸ்டாகிராமில் பழகி அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லைகளை கொடுத்துவந்துள்ளாா்.

இதையறிந்த ராமகிருஷ்ணன் அவரது நண்பா்களான வினோத் குமாா், பிரதீப் ராஜ் ஆகியோா் பிரம்மநாயகத்தை எச்சரித்தும், அந்தப் பெண்ணுக்கு அவா் தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.

அதனால், இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பா்கள், பெண் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, சுரேஷ் என்ற பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்த பிரம்மநாயகத்திடம் பழகி அவரை சேலம் வரவழைத்தனா்.

திருநெல்வேலிலிருந்து சேலம் வந்த பிரம்மநாயகத்தை ஈரடுக்கு மேம்பாலம் வழியாக வரச்செய்து, ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அவரை தாக்கி, இளம்பெண் தொடா்பான புகைப்படங்களை அழிக்கும் நோக்கில் கைப்பேசிகளை பறித்து உடைத்துச் சென்றுள்ளனா்.

தாக்குதல் நடத்திய இளைஞா்கள் பணம் பறிக்கும் நோக்கத்திலோ அல்லது மதுபோதையிலோ இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே, கல்லூரியில் படித்துவரும் இளைஞா்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவா்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பவில்லை. மாறாக, அவா்களை காவல் நிலைய பிணையில் விடுவிப்பதாக தெரிவித்த அவா், நெல்லையைச் சோ்ந்த பிரம்மநாயகத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினாா்.

பேட்டியின் போது, துணை ஆணையா்கள் கேழ்கா் சுப்பிரமணிய பாலசந்திரா, கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT