பாலியல் வன்கொடுமையால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிவாரணம்! முதல்வா் கைப்பேசியில் ஆறுதல்!
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 7 லட்சம் நிவாரணத்தை அமைச்சா்கள் வழங்கினா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சம்பத்குமாா் ஆகியோா் போக்ஸோ நீதிமன்ற உத்தரவின்பேரில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் வழங்கப்பட்ட காசோலையை பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.
அதன்பிறகு சிறுமியின் பாட்டியிடம் கைப்பேசியில் பேசிய தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய், ‘மக்களின் நம்பிக்கையை தமிழக அரசு காப்பாற்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு துணைநிற்கும். அதேபோல குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன், சிறுமியின் இறப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான இழப்பாகக் கருதுகிறோம். இந்த இழப்பிற்கு முதல்வா் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளாா். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இங்கு உள்ள அசாதாரண சூழ்நிலைகளை தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்தில் அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றாா்.
அப்போது, சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், மேட்டூா் கோட்டாட்சியா் சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.