கொடைக்கானல் மலைச்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சரிந்து கிடக்கும் பாறைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த மழையால் கொடைக்கானல்- வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் உள்ள வடகரைப்பாறை, டம்டம்பாறை அருகில் பாறைகள் உடைந்தும், மரக்கிளைகள் முறிந்தும் போக்குவரத்துக்கு இடையூறாக சரிந்து கிடக்கின்றன. மேலும் பழனி- கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள வடகவுஞ்சி பிரிவு, 10-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதிகளிலும் சிறிய பாறைகள் விழுந்து கிடக்கின்றன. இதே போல மலைச்சாலைகளில் பல்வேறு இடங்களில் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் மஞ்சளாறு அணையின் தோற்றத்தை காணும் இடத்திலிருந்து காட்ரோடு, காவல் சோதனைச்சாவடி வரையிலுள்ள சுமார் 23 கி.மீ தூரத்துக்கு ஜல்லி கற்கள், மணல் ஆகியவை குவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, விபத்துக்களும் நடக்கின்றன. சீனிவாசபுரம், லாஸ்காட் சாலை, உகார்த்தே நகர் சாலைகளில் வடிகால் வசதியில்லாததால் மழைநீர் மற்றும் கழிவுநீர் மலைச்சாலகளில் ஒடுவதால் தற்போது சீசனுக்காக போடப்பட்ட தார்ச் சாலைகள் சேதமடைந்து வருகின்றன.
எனவே கொடைக்கானல்- பழனி- வத்தலகுண்டு மலைச்சாலைகளில் சரிந்துள்ள பாறைகள், மண் சரிவுகள் மற்றும் மரக்கிளைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலைப் பணியாளர்களின் பணிகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள்: கொடைக்கானலில் உள்ள நெடுஞ்சாலைப் பகுதிகளை பராமரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளரகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பணிகளை சாலை ஆய்வாளர் பார்வையிட்டு அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாததால் மலைச்சாலையின் பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொடைக்கானல் மலைச்சாலைகளில் ஆங்காங்கே சரிந்துள்ள சிறுபாறைகள், மரக்கிளைகள் உடனடியாக அகற்றப்படும். தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மலைச்சாலைகளில் கேபிள் பதிக்கும் பணிக்காக குவிக்கப்பட்டுள்ல ஜல்லிக்கற்கள், மணல் விரைவில் அகற்றப்படும்.
சாலைப் பணியாளர்கள் பணி குறித்து சாலை ஆய்வாளர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் எவ்வித அறிக்கைகளும் கொடுப்பதில்லை. இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.