ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து 3 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
ஒட்டன்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஒட்டன்சத்திரம்- பழனி சாலை அரசப்பிள்ளைபட்டி ரயில்வே கேட் அருகே சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் மரம் விழுந்ததில் மின்கம்பம் உடைத்து, மின்சார வயர்கள் செல்லமுத்து என்பவரின் தோட்டத்தில் விழுந்தன. இந்நிலையில் புதன்கிழமை மின்வாரிய ஊழியர்கள் அந்த மின் வயர்களை சரி செய்யாமல் மின் விநியோகம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அப்போது மின்வயர்கள் அருகே மேய்ந்து கொண்டு இருந்த விவசாயி செல்லமுத்துவின் 3 செம்மறி ஆடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், அங்கு அதிகாரிகள் வராததால் செல்லமுத்துவின் உறவினர்கள் பழனி- திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பொ.மாரிமுத்து, துணை வட்டாட்சியர் எம்.முத்துச்சாமி, காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாட்சியர் மாரிமுத்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.