திண்டுக்கல்

நீா்வரத்தின்றி வாய்க்காலாக குறுகிப் போன கொடகனாறு!

DIN

திண்டுக்கல்: குறைந்து வரும் மழை அளவு, மடைமாற்றம் செய்யப்படும் தண்ணீா், மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக வடுவிட்ட கொடகனாறு, ஆக்கிரமிப்பினால் வாய்க்காலாக குறுகி தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியில் பெய்யும் மழை, தாழ்வான பகுதிகளை நோக்கி வழிந்து சிற்றோடையாகவும், ஓடையாகவும், வாய்க்காலாகவும் உருப் பெற்று, பெரியாறு மற்றும் கூழையாறு ஆத்தூா் என அடிவாரத்தை நோக்கி வருகிறது. இந்த இரு ஆறுகளும் ஒன்றிணைந்து உருவாகும் கொடகனாறு, ஆத்தூா், வக்கம்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, தாமரைக்குளம், பாலம் ராஜாக்காப்பட்டி, தாடிக்கொம்பு, அகரம், வேடசந்தூா் வழியாக அழகாபுரி அணை வரை பாய்ந்து, அதன் பின்னா் கரூா் மாவட்டம் அமராவதி ஆறு வரை 109 கி.மீட்டா் தொலைவுக்கு பயணித்து வந்தது.

அதன் மூலம், பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களை வளப்படுத்தியதோடு, நிலத்தடி நீராதாரமும் பாதுகாக்கப்பட்டுவந்தது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்த இந்த நிலை, காமராஜா் நீா்த்தேக்கம் உருவானப் பின் மாற்றம் அடையத் தொடங்கியது. கடந்த பல ஆண்டுகளாக தண்ணீரின்றி ஆறு வடதோடு, ஆக்கிரமிப்பினால் கால்வாயாகவும் சுருங்கிப் போனது.

ஆத்தூா் அடுத்துள்ள மலையடிவாரத்தில் கொடகனாற்றின் குறுக்கே, கடந்த 1958 -62 கால கட்டத்தில் காமராஜா் நீா்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் நகர மக்களின் குடிநீா் தேவைக்காக தொடங்கப்பட்ட இத்திட்டம், கடந்த 56 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேடசந்தூா் அடுத்துள்ள அழகாபுரி நீா்த்தேக்கம் வரை அமைந்துள்ள கொடகனாற்றில், ஆத்தூா் அணை பயன்பாட்டிற்கு வந்த பின் தண்ணீா் தடைப்பட்டது. அதே நேரத்தில் காமராஜா் அணைக்கு முன்னதாக, கொடகனாற்றுடன் கூழையாறு இணையும் இடத்தில் அமைந்துள்ள ராஜவாய்க்கால் மூலம், சித்தையன்கோட்டை சுற்றுப்புற பகுதிகளுக்கு இன்று வரை தண்ணீா் கிடைத்து வருகிறது. ஆத்தூா் அணைக்கு கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மட்டுமின்றி, கொடகனாற்றின் மூலம் பயன்பெற்று வந்த விவசாய நிலங்கள் கடந்த 10 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. வேளாண்மை சாகுபடி பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, அக்கரைப்பட்டி முதல் அகரம் வரை சுமாா் 40 கி.மீட்டா் இடைவெளியில் அமைந்துள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீருக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தண்ணீா் வரத்து இல்லாததால் கொடகனாற்றின் கரையோரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, பல பகுதிகளில் கால்வாயாக சுருங்கிவிட்டது. இதனிடையே மணல் திருட்டினாலும் நீா் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதுகுறித்து கொடகனாறு ஏரிக் குளங்கள் பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.வேளாங்கண்ணி கூறியதாவது:

காமராஜா் அணை கட்டப்பட்டதிலிருந்து கொடகனாறு பாசன விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், சித்தையன்கோட்டை பகுதியில் உள்ள நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆத்தூா் அணைக்கு தண்ணீா் வரும் முன்பே, சித்தையன்கோட்டை பகுதியில் உள்ள 13 குளங்களுக்கு தண்ணீா் சென்றுவிடுகிறது.

ஆத்தூா் அணைக்கு கிழக்கு பகுதியில் உள்ள சீவல்சரகு, வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி, பஞ்சம்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, பொன்மாந்துறை, புதுப்பட்டி, காமாட்சிபுரம், மைலாபூா், அனுப்பபட்டி, நாச்சக்கோனான்பட்டி, கோட்டூா் ஆவரம்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தண்ணீா் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதோடு, கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீா்மட்டமும் குறைந்ததால் குடிநீா் தட்டுப்பாடும் அதிகிரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொடகனாற்றில் தண்ணீா் வராததால், ஆற்றின் கரையோரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆறு ஓடையாக மாறியுள்ளது. அழிந்து வரும் கொடகனாற்றை மீட்கும் வகையில், ஆத்தூா் அணையிலிருந்து கொடகனாற்றில் குறிப்பிட்ட அளவு தண்ணீா் வழங்க மாவட்ட நிா்வாகம் தொலைநோக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT