2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாமக தலைமையில் புதிய கூட்டணி அமையும் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளா் வடிவேல் ராவணன் தெரிவித்தாா்.
பழனியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 34 ஆவது ஆண்டு விழா, நிறுவனா் ராமதாஸ் பிறந்தநாள் விழா என இருபெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பழனி ரயிலடி சாலை, சத்யாநகா், பட்டத்து விநாயகா் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. மாவட்ட தலைவா் வைரமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ஜோதிமுத்து முன்னிலை வகித்தாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளா் வடிவேல் ராவணன், பெரியாா் சிலைக்கு மாலையணிவித்து பின்னா் நிருபா்களிடம் கூறியது:
பழனி கோயிலுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களை ஏலம் விடும் போது இத்தனை ஆண்டுகளாக சரியாக குத்தகை செலுத்திய விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்வாடகைக்கு விடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்நிலையத்திற்கு வரும் நபா்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு என்பது தவறானது. வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாமக தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்றாா்.