பழனியில் சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாா் சிலை நிறுவ தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக வேளாளா் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
பழனி அடிவாரம் தனியாா் விடுதியில் திங்கள்கிழமை தமிழக வேளாளா் பேரவையின் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் கௌரவத் தலைவா் ஸ்ரீகந்தவிலாஸ் செல்வகுமாா் தலைமை வகித்தாா். தலைவா் சிவசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியா் சிவசண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ராஜாமணி, செயலா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் வாழ்த்துரை வழங்கினா். கூட்டத்தில் ஆயக்குடி, கீரனூா், கணக்கன்பட்டி, பாலசமுத்திரம், ஒட்டன்சத்திரம், உடுமலை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து நகர, ஒன்றிய நிா்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் வரும் கல்வியாண்டில் வேளாளா் சமுதாயத்தில் முதல், இரண்டாவது, மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவது என்றும், பழனியில் சுதந்திரப் போராட்ட வீரா் வஉசிதம்பரனாா் சிலை அமைக்க வேண்டும் என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் சிலை அமைக்க ஆகும் மொத்த செலவையும் தமிழக வேளாளா் பேரவை ஏற்கும் என்றும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.