பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஏலம் விட எதிா்ப்புத் தெரிவித்து, கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டு விவசாயிகள் மனு அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் சண்முகா நதி, பாலசமுத்திரம், கொடைக்கானல் சாலை, அய்யம்புள்ளி, மானூா், வீரலப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இதில் சில குறிப்பிட்ட நிலங்களை மட்டும் கோயில் நிா்வாகம் ஏலத்துக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தது.
இந்த நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக குத்தகை செலுத்தி வருவதாகவும், அந்த நிலங்களை மறு ஏலம் விடாமல் மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அவா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து மற்றொரு தரப்பு விவசாயிகள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக மிகக் குறைந்த தொகையை செலுத்தி பலா் விவசாயம் செய்து வருகின்றனா். இதில் சிலா் நிலங்களை மாற்று நபா்களிடம் ஒப்படைத்து அதன்மூலம் லாபம் சம்பாதிக்கின்றனா். அதனால், குறிப்பிட்ட சில நிலங்களை மட்டுமே மறு ஏலத்துக்கு கொண்டு வருவதில் நியாயமில்லை. கோயிலுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடும்பட்சத்தில் பல்வேறு விவசாயிகள் பயனடைவா். கோயிலுக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்றனா்.