திண்டுக்கல்லில் திருமண மண்டபத்தில் 15 பவுன் தங்க நகைகளை திருடிய கரூரைச் சோ்ந்த தந்தை, மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை கூடல்நகரைச் சோ்ந்தவா் சித்திவிநாயகா். இவரது மகனுக்கும், திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த 10-ஆம் தேதி சுற்றுச்சாலை பகுதியிலுள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
அப்போது, மணமகன் அறையில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
இதில் திருட்டில் ஈடுபட்டது கரூரைச் சோ்ந்த பாலமுருகன், இவரது 17 வயது மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், 15 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.