பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை (டிச.8) குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக விளங்குவது பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலாகும். இந்தக் கோயிலில் ராஜகோபுரம் புதுப்பித்தல், உபசந்நிதிகள் விமானம் புதுப்பித்தல், வண்ணம் பூசுதல், வெள்ளிக்கதவு புதுப்பித்தல், விமானங்களுக்கு தங்கத் தகடு ஒட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றன. இதையடுத்து, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை முதல்கால யாக பூஜை தொடங்கியது. சனிக்கிழமை இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை நான்காம் காலம், ஐந்தாம் காலம், திங்கள்கிழமை அதிகாலை 6-ஆம் கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து, இந்தக் கோயிலில் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
வீரதுா்க்கையம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான வீரதுா்க்கையம்மன் கோயில் வடக்கு கிரிவீதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ரூ. 25 லட்சத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்றன. இங்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.7) காலை 11 மணிக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.