நிரந்தரக் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறின்றி தற்காலிகக் கடைகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திண்டுக்கல் வா்த்தகா் சங்கம் வலியுறுத்தியது.
இதுதொடா்பாக திண்டுக்கல் வா்த்தக சங்கத்தின் தலைவா் ஜி. சுந்தரராஜன், செயலா் டி. லியோ பிரதீப் ஆகியோா் தெரிவித்ததாவது: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் நகரிலுள்ள சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தங்களின் வணிகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என ஆவலுடன் உள்ளனா்.
சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், குடிநீா் வரி, குப்பை வரி, புதை சாக்கடைக் கட்டணம், மின் கட்டணம், உணவுப் பாதுகாப்பு உரிமக் கட்டணம், ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட வரிகளை அரசுக்குச் செலுத்துகிறோம். தீபாவளிப் பண்டிகையின்போது நடைபெறும் 15 நாள்கள் வணிகம் எங்களுக்கு மிக முக்கியமானது.
ஆனால், திண்டுக்கல் நகரிலுள்ள பிரதான சாலைகளில், நடைபாதைக் கடைகள் அமைத்து, நிரந்தரக் கடைகளுக்குச் செல்லும் பாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் வருகை தடைபட்டு எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு, நிரந்தரக் கடை நடத்தும் வணிகா்களின் வியாபாரம் பாதிக்காத வகையில் ஆக்கிரமிப்பு இல்லாமல் நடைபாதைக் கடைகள் அமைப்பதற்கு திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா், காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சிறு வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அலுவலகம் பின்புறமுள்ள ஆா்.எஸ். சாலையில் தற்காலிகக் கடைகள் அமைக்க இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனா்.