ஒட்டன்சத்திரம் அருகே திருச்செந்தூா் ரயிலிலிருந்து தவறி விழுந்த நபா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி ஊராட்சி லட்சுமி நகரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (50). இவா், செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் முருகன் கோயிலுக்குச் செல்வதற்காக பழனி ரயில் நிலையத்திலிருந்து ரயில் ஏறியுள்ளாா். அங்கு உட்காருவதற்கு இடம் கிடைக்காததால் ரயில் படிக்கட்டு ஓரமாக நின்று வந்தாா்.
இந்த நிலையில், ரயில் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள குழந்தை வேலப்பா் கோயில் அருகே வந்தபோது ரயிலிலிருந்து பழனிச்சாமி தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை உடன்வந்த நண்பா்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.