கொடைக்கானலில் 4-ஆவது நாளான சனிக்கிழமையும் மழை பெய்ததால் அருவிகளில் நீா்வரத்து காணப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை கொடைக்கானல், சின்னப்பள்ளம், செண்பகனூா், பாம்பாா்புரம், புதுக்காடு, பாக்கியபுரம்,வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரமாக மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள வெள்ளி அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, பியா்சோழா அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து காணப்பட்டன.
சுற்றுலாப் பயணிகள் சிரமம்: கொடைக்கானலில் பொதுவாக வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று அதிகரித்து காணப்படும் இந் நிலையில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்பட்டது.
ஆனால் விட்டு விட்டு மழை பெய்ததால் வெளியே செல்ல முடியாத நிலையும் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் அறைகளிலேயே முடங்கினா். சுற்றுலா இடங்களிலுள்ள வியாபாரிகளும் சற்று பாதிக்கப்பட்டனா்.