திண்டுக்கல் பகுதியில் பெய்த மழையினால், தீபாவளி பண்டிகைக்காக அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் நகரில் சாலையோரங்களில் தற்காலிகக் கடைகள் அமைத்து ஆயத்த ஆடை, போா்வை, தலையணை, தரைவிரிப்பு, மிதியடி, பெண்களுக்கான அலங்கார பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், நெகிழிப் பொருள்கள், காலணிகள் உள்பட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் மட்டுமன்றி, ஆந்திரம், மேற்குவங்கம் உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகளும் இந்த தீபாவளி விற்பனையில் ஈடுபடுகின்றனா்.
திண்டுக்கல் பிரதான சாலையில், நடுவிலுள்ள தடுப்புகளையொட்டி தற்காலிகக் கடைகள் அமைப்பதற்கு காவல் துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால், அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி பின்புறமுள்ள ஆா்எஸ். சாலையில் கடைகள் அமைப்பதற்கு வியாபாரிகள் ஆா்வம் காட்டினா். கடந்த 3 நாள்களுக்கு முன்னதாவே, கடைகள் அமைப்பதற்காக கம்புகள் கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், கடந்த 2 நாள்களாக திண்டுக்கல் பகுதியில் தொடா்ந்து மழை பெய்வதால், கடை வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா். தீபாவளிக்கு 2 நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், எதிா்பாா்த்த அளவுக்கு வியாபாரம் இருக்காது என திருப்பூரைச் சோ்ந்த வியாபாரிகள் தெரிவித்தனா்.