திண்டுக்கல்: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் 2 நாள்களில் 25 டன் எடையுள்ள குப்பைகள் கூடுதலாகச் சேகரிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாநகராட்சியில் சுமாா் 500 போ் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதனால், முக்கிய வீதிகளில் வழக்கத்தை விட அதிகமாக குப்பைகள் சோ்ந்தன.
தீபாவளிப் பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் மட்டும் சுமாா் 7 டன் குப்பைகள் அதிகரித்தன. இதன் மூலம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் நகரில் திங்கள், செவ்வாய் என இரு நாள்களில் மட்டும் 25 டன் குப்பைகள் வழக்கத்தை விட கூடுதலாகச் சேகரிக்கப்பட்டன.
தூய்மைப் பணியாளா்களுக்கு உதவும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. இதை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தொடங்கி வைத்தாா். தூய்மைப் பணி முகாமில் ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.ரஞ்சித், செயலா் கே.முகேஷ், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் நிருபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.