கொடைக்கானல்: கொடைக்கானலில் 4-ஆவது நாளாக பெய்து வரும் தொடா் மழையால் செவ்வாய்க்கிழமை பல இடங்களில் மண் சரிவும், மின் கம்பங்களும் சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கொடைக்கானல்-செண்பகனூா், இருதயபுரம்-அட்டக்கடி செல்லும் சாலையில் மண் சரிவும், பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் கீழே விழுந்து சேதமடைந்தன. இதனால், அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, மின் வாரியத் துறையினரும், வனத் துறையினரும் கீழே விழுந்த மின் கம்பங்கள், மரங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஆனந்தகிரி, லாஸ்காட் சாலை, எம்.எம்.தெரு, கோயில் கடை முதல்-பிரகாசபுரம் சாலை, பொ்ன்ஹில் சாலை,டிப்போ சாலை உள்ளிட்ட சாலைகளில் அதிகளவு தண்ணீா் தேங்கியது. இதனால், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.
பேரிஜம் ஏரியை பாா்க்க அனுமதி: பேரிஜம் ஏரிப் பகுதியில் கடந்த 20, 21-ஆம் தேதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏரிக்கு செல்ல வனத் துறை தடை விதித்தனா். இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் முடிவுற்ால் புதன்கிழமை (அக்.22) முதல் இந்த ஏரியை சுற்றிப் பாா்க்க மீண்டும் வனத் துறை அனுமதி வழங்கியது.