மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் ஒத்தக்கடை காவல்நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள இடையப்பட்டியைச் சேர்ந்த சித்திரன் மகன் கண்ணன்(31). இவரது மனைவி பஞ்சவர்ணம்(28). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சாப்டூரில் நடைபெற்று வரும் கோயில் திருவிழாவுக்கு இரண்டு மகன்களும் பாட்டியுடன் சென்று விட்டனர். வீட்டில் கண்ணன், பஞ்சவர்ணம் மட்டும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை காலை வெகு நேரம் ஆகியும் பஞ்சவர்ணம் வெளியே வராததைக் கண்ட பக்கத்து வீட்டினர், அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பஞ்சவர்ணம் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தகவலின்பேரில் நாகையாபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக பஞ்சவர்ணத்தின் கணவர் கண்ணனை தேடி வந்தனர்.
இந்நிலையில் பஞ்சவர்ணத்தை கொலை செய்து விட்டதாகக்கூறி கண்ணன் ஒத்தக்கடை காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, மனைவியின் நடத்தையில் கண்ணனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு குழந்தைகள் திருவிழாவுக்கு சென்றுவிட்ட நிலையில், கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கியுள்ளனர். அதிகாலை 3 மணியளவில் கண்ணன் கண் விழித்துப் பார்த்தபோது பஞ்சவர்ணத்தை காணவில்லை. இதையடுத்து வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். கண்ணனை பார்த்தவுடன் வினோத் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் கண்ணன் மனைவியைக் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்து தூங்கிய நிலையில், காலை 8.30 மணியளவில் பஞ்சவர்ணத்தை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கண்ணன், பஞ்சவர்ணத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்று தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாகையாபுரம் போலீஸார் கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.