ரூ.1089.17 கோடி கிரானைட் முறைகேடு தொடர்பான 3 வழக்குகளில் கிரானைட் அதிபர் பழனிச்சாமி உள்ளிட்ட 26 பேர் மீது 4,553 பக்க குற்றப்பத்திரிகையை மேலூர் நீதிமன்றத்தில் போலீஸார் புதன்கிழமை தாக்கல் செய்தனர்.
மேலூர் பகுதியில் கிரானைட் கற்களை வெட்டித் திருடியது தொடர்பாக பிஆர்பி கிரானைட் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது கீழவளவு, மேலூர், மேலவளவு காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட குற்றப் பிரிவில் மொத்தம் 98 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இவற்றில், இதுவரை 69 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்குகள் மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், கீழவளவு பகுதியில் ரூ.1089.17 கோடி கிரானைட் முறைகேடு தொடர்பாக பிஆர்பி கிரானைட் நிறுவனர் பழனிச்சாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் 24 பேர் மீது கீழவளவு போலீஸார் பதிவு செய்த 2 வழக்குகள் மற்றும் மேலூர் போலீஸார் பதிவுசெய்த ஒரு வழக்கு ஆகிய 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 4,553 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, மாஜிஸ்திரேட் செல்வகுமார் முன்னிலையில், கிரானைட் முறைகேடு வழக்குகள் விசாரணைக்கான சிறப்பு வழக்குரைஞர் ஷீலா மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர்.
50 வழக்குகள் விசாரணை ஒத்திவைப்பு: சட்ட விரோதமாக வெட்டியெடுத்து தனியார் நிலங்களில் பதுக்கி வைத்துள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதிகோரி மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தாக்கல் செய்த 42 வழக்குகள் மற்றும், கிரானைட் முறைகேடு சம்பந்தமாக போலீஸார் தொடர்ந்திருந்த 8 வழக்குகள் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
இவற்றின் மீதான விசாரணையை வரும் ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.