மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணிகளுக்காக முறையான விதிமுறைகளைப் பின்பற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த வி.வி. முத்துராமு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை விமான நிலையத்தில் இருந்து தினமும் இரண்டு சர்வதேச விமான சேவைகள் கொழும்புவுக்கும், துபைக்கும் இயக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கும் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்ட இந்திய விமான நிலையங்கள் ஆணையம், மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதையை 7,500 அடியில் இருந்து 12,500 அடியாக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் சின்ன உடைப்பு, குசவன்குண்டு, கூடல்செங்குளம் ஆகிய பகுதிகளின் அருகில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஓடுபாதை விரிவுபடுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், விமான நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள உத்தங்குடி, கப்பலூர் சுற்றுச்சாலையின் ஒரு பகுதியான மண்டேலா நகர் சாலை அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வகுத்துள்ள திட்டத்திலும் இதுவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழக அரசு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சுற்றுச்சாலையை மாற்றுப்பாதையில் இயக்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அச்சாலை மண்டேலா நகரில் இருந்து அய்யன்பாப்பாக்குடி, பெருங்குடி புதுக்குளம் வழியாக விமான நிலையத்தின் வடக்கு பக்கமாகச் சென்று, பரம்புப்பட்டி என்ற இடத்தில் அருப்புக்கோட்டை சாலையைத் தொடும்.
இந்நிலையில், உத்தங்குடி, கப்பலூர் சுற்றுச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை, தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் 24.12.2015-இல் அறிவித்தது. சட்டப்பேரவை அறிவிப்புக்கு மாறாக சுற்றுச்சாலையை தற்போதுள்ள நிலையிலேயே விரிவுபடுத்தப்படுவதாக, இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர் இதை நடைமுறைப்படுத்த ஆயத்தமாவதாகத் தெரியவருகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்தின்போது, சுற்றுச்சாலையில் உள்ள மண்டேலா சாலை பகுதி அகற்றப்பட வேண்டும். இது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாக அமையும். எனவே, இந்த இரு திட்டங்களையும் முதலில் அறிவித்தபடியே அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ. செல்வம், என். ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறைச் செயலர், இந்திய விமான நிலையங்கள் ஆணைய இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.